எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பவுச்சர் பைகட்டுரைகள்

சிங்கக்கெபியிலிருந்து

தாஹெரும் அவருடைய மனைவி டோன்யாவும் இயேசுவை ஏற்றுக்கொண்டதினிமித்தம் தங்கள் சொந்த தேசத்தில் பாடுகளை அனுபவிக்கவேண்டியதை அறிந்தே செயல்பட்டனர். அதின் விளைவாய் தாஹெர் கண்களும் கைகளும் கட்டப்பட்டவராய் சிறையிலடைக்கப்பட்ட விசுவாச துரோகம் இழைத்தவர்களாய் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் சித்திரவதை அனுபவிக்கப்போகும் முன்பு, அவரும் அவருடைய மனைவி டோன்யாவும் இயேசுவை மறுதலிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தனர். 

அவரை கொலைசெய்ய கொண்டுபோகும் இடத்தில் நடந்த சம்பவம் அவரை ஆச்சரியப்படுத்தியது. நீதிபதி அவரைப்பார்த்து, “எனக்கு ஏன் என்று தெரியவில்லை, ஆனால் மீனின் வாயிலிருந்தும் சிங்கத்தின் வாயிலிருந்தும் உன்னை விடுவிக்க விரும்புகிறேன்” என்று சொன்னார். நீதிபதி உதாரணமாய் பயன்படுத்திய வேதத்தின் இந்த இரண்டு சம்பவங்களை வைத்து (யோனா 2, தானியேல் 6) தேவன் தன்னை விடுவிக்க விரும்புகிறார் என்பதை தாஹெர் புரிந்துகொண்டார். தாஹெர் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவனுடைய குடும்பம் வேறு தேசத்திற்கு நாடுகடத்தப்பட்டனர். 

தாஹெரின் இந்த ஆச்சரியமான மீட்பு தானியேலின் சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. திறமையான நிர்வாகியாய் அவன் படிப்படியாய் முன்னேறுவதை அவனோடிருந்த மற்ற தலைவர்கள் விரும்பவில்லை (தானியேல் 6:3-5). ராஜாவைத் தவிர்த்து யாரையும் வணங்கக்கூடாது என்னும் சட்டத்தை பிறப்பிக்கச் செய்து, அவனை குற்றப்படுத்த எண்ணினர். தானியேல் இதை சற்றும் பொருட்படுத்தவில்லை. தரியு ராஜாவுக்கு அவனை சிங்கக்கெபியில் போடும்படிக்கு உத்தரவு பிறப்பிப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை (வச. 16). தாஹெரை ஆச்சரியவிதமாய் விடுவித்ததுபோல, தானியேலை தேவன் மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார் (வச. 27). 

இயேசுவை பின்பற்றுவதினால் இன்று அநேக தேவ பிள்ளைகள் உபத்திரவத்தை சந்திக்கின்றனர். சிலர் கொலையும் செய்யப்படுகின்றனர். நாம் உபத்திரவத்தை சந்திக்கும்போது, நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட வழியை கர்த்தர் வைத்திருக்கிறார் என்று நம்முடைய விசுவாசத்தை பெலப்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் எந்த யுத்தத்தை சந்தித்தாலும் அவர் உங்களோடிருக்கிறார் என்பதை அறியுங்கள்.

உயிருள்ளவரை நண்பர்கள்

வில்லியம் கூப்பர் (1731–1800) எனும் ஆங்கில கவிஞரும், அவரது போதகரும் முன்னாள் அடிமை வியாபாரியுமான ஜான் நியூட்டனும் (1725–1807) நண்பர்களானார்கள். மன அழுத்தத்தாலும், கவலையாலும் பாதிக்கப்பட்ட கூப்பர், இருமுறை தற்கொலைக்கு முயன்றார். நியூட்டன் அவரை சந்திக்கும்போதெல்லாம், இருவரும் தேவனைப் பற்றிப் பேசிக்கொண்டே நீண்டதூரம் ஒன்றாய் நடப்பார்கள். கூப்பரின் கவிதை  எழுதும் திறனைத் தட்டியெழுப்பும் வகையில், தனக்காகப் பாடல்களை எழுதும்படி ஊழியக்காரர் கேட்டுக்கொண்டார். கூப்பர் சம்மதித்து, "தேவன் அறிவுக்கெட்டாத வகையில் செயல்படுகிறார்" என்ற பிரபலமான பாடல் உட்பட அநேக பாடல்களை இயற்றினார். நியூட்டன் வேறு சபைக்கு மாறுதலாகிச் சென்றபோதிலும், அவரும் கூப்பரும் உற்ற நண்பர்களாய் கூப்பரின் மரணம் வரைக்கும் கடிதங்களில் உறவாடினார்கள்.

கூப்பர் மற்றும் நியூட்டன் ஆகிய இருவரின் நட்பை நான் பழைய ஏற்பாட்டின் தாவீது மற்றும் யோனத்தானுக்கு இடையேயான நட்போடு தொடர்புப்படுத்திப் பார்க்கிறேன். தாவீது கோலியாத்தை வென்றபின், "யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்." (1 சாமுவேல் 18:1). யோனத்தான் சவுல் ராஜாவின் குமாரனாய் இருந்தாலும், ராஜாவின் கோபத்திற்கும் பொறாமைக்கும் தாவீதை தற்காக்கிறான், தாவீது ஏன் கொல்லப்பட  வேண்டுமென்று தன் தந்தையிடமே கேள்வி எழுப்புகிறான். அதற்கு மாறுத்தரமாகச்  சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான் (20:33). ஆயுதத்திற்குத் தப்பிய யோனத்தானுக்கு தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது மனநோவாயிருந்தது. (வ.34). 

இந்த இரண்டு ஜோடி நண்பர்களும், உயிருள்ளவரை இணைந்திருந்து, தேவனை நேசிக்கவும் ஊழியம் செய்யவும் ஒருவரை ஒருவர் உந்தித்தள்ளினர். இதுபோல நீங்களும் இன்று உங்கள் நண்பரை எவ்வாறு ஊக்குவிப்பீர்கள்?

நம்பிக்கைகளும் ஏக்கங்களும்

நான் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்ற நாட்களில், அமெரிக்காவின் நன்றிசெலுத்தும் விடுமுறை நாளானது வேறொரு வியாக்கிழமைக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த வாரத்தின் இறுதியில் நான் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்தினாலும், அந்த குறிப்பிட்ட நாளில் என்னுடைய குடும்பத்தினருடனும் சிநேகிதர்களுடனும் இருக்கமுடியவில்லையே என ஏங்கினேன். ஆனாலும் என் ஏக்கங்கள் எனக்கு மட்டும் உரியது இல்லை என்பதை புரிந்துகொண்டேன். விசேஷமான தருணங்களிலும் விடுமுறை நாட்களிலும் நமக்குப் பிரியமானவர்களுடன் இருக்க நாம் அனைவரும் ஏங்குகிறோம். நாம் கொண்டாடும் போது கூட, நம்முடன் இல்லாத ஒருவரை நாம் இழக்க நேரிடலாம் அல்லது நமது உடைந்த குடும்பம் நிம்மதியாக இருக்க ஜெபிக்கலாம். 

இதுபோன்ற சமயங்களில், வேதத்தின் ஞானத்தைப் பற்றி ஜெபிப்பதும் சிந்திப்பதும் எனக்கு உதவியது. அதில் சாலெமோனின் நீதிமொழியும் உள்ளடங்கும்: “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்” (நீதிமொழிகள் 13:12). இந்த வார்த்தையில், சாலெமோன் “தாமதிக்கிற நம்பிக்கை" ஏற்படுத்தக்கூடிய விளைவை குறிப்பிடுகிறார். அதிக ஏக்கமான ஒன்றை தாமதப்படுத்துவது, கவலை மற்றும் வேதனையை விளைவிக்கும். ஆனால் அது கிடைக்கும்போது, அது ஜீவ விருட்சம் போலிருக்கும் என்று குறிப்பிடுகிறார். அது நம்மை புத்துணர்ச்சியுடனும், துடிப்புடனும் உணர அனுமதிக்கிறது.

நம்முடைய சில நம்பிக்கைகள் மற்றும் ஆசைகள் உடனடியாக நிறைவேறாமல் போகலாம். சிலவைகளை நம்முடைய மரணத்திற்கு பின்பும் தேவன் நிறைவேற்றலாம். நம்முடைய ஏக்கம் எதுவாக இருந்தாலும், அவர் நம்மை இடைவிடாமல் நேசிக்கிறார் என்பதை அறிந்து, நாம் அவரை விசுவாசிக்கலாம். அத்துடன் ஒருநாள் நம்முடைய அன்புக்குகந்தவர்களோடு அவருடைய பரம விருந்தில் பங்கேற்போம் (வெளி. 19:6-9, பார்க்க).

பிறனை நேசித்தல்

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தனது பர்மிங்காம் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தின் வார்த்தைகள், கொரோனா தொற்றுநோயின் நாட்களின் சுயதனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு சமங்களில் உண்மையாயிருந்தது. அதில் அவர், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கையில், ஒரு நகரத்தில் என்ன நடக்கிறது என்பதை மட்டும் பொருட்படுத்திவிட்டு, மற்ற நகரங்களில் நடப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடமுடியாது. “நாம் விதியின் ஆடை பின்னலில், பிணைக்கப்பட்டுள்ளோம்” என்ற அவர் சொல்லுகிறார். ஒருவருக்கு தனிப்பட்ட விதத்தில் ஏற்படும் பாதிப்பானது, அனைவருக்கும் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. 

அதேபோல், கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க, உலகெங்கிலும் உள்ள நகரங்கள் மற்றும் நாடுகள் முழு அடைப்பை அமுல்படுத்தி, நமது இணைப்பை வெளிப்படுத்தியது. ஒரு நகரத்தை பாதித்தது விரைவில் மற்றொரு நகரத்தையும் பாதிக்கலாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மற்றவர்களுக்கு எவ்வாறு அக்கறை காட்ட வேண்டும் என்று தேவன் தம் மக்களுக்கு போதித்தார். மோசே மூலம், இஸ்ரவேலர்களுக்கு வழிகாட்டவும், அவர்கள் ஒற்றுமையாய் வாழவும் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். “உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்” (லேவியராகமம் 19:16) என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், “பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூறுவாயாக” (வச. 18) என்றும் போதித்தார். மற்றவர்களுடைய வாழ்க்கையை தங்கள் வாழ்க்கை போலவே மதிப்பிட்டு பார்க்காவிட்டால், சமுதாயம் உடைய துவங்கும் என்பதை தேவன் நன்கு அறிந்திருந்தார். 

தேவனுடைய போதனைகளை நாமும் ஏற்றுக்கொள்ளலாம். நம்முடைய அன்றாட செயல்களில் நாம் ஈடுபடும்போது, மற்றவர்ளோடு நாம் எந்த அளவிற்கு தொடர்பில் இருக்கிறோம் என்பதை அறிந்து, அவர்களை நேசிக்கவும் உதவிசெய்யவும் தேவனை நாடுவோம். 

மெய்யான மாற்றம்

தெற்கு லண்டனின் கூட்டநெரிசலான பகுதியில் பிறந்து வளர்ந்த கிளாட், தன்னுடைய 15ஆம் வயதில் மரிஜூவானா என்னும் போதைப்பொருளையும், 25ஆம் வயதில் ஹெராயீனையும் விற்கும் அளவிற்கு வாழ்ந்தான். அவனுடைய அந்த தொழிலுக்கு ஆதரவாக, இளைஞர்களுக்கு ஆலோசனை கூறும் நபராய் சமுதாயத்திற்கு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான். அவனுடைய மேலாளர் மூலமாய் சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டான். இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான். கிறிஸ்தவ விசுவாசத்தைப் போதிக்கும் வேதபாட வகுப்பைப் படித்து, கிறிஸ்து தன்னுடைய வாழ்க்கையில் வருவதைக் குறித்துப் பயந்தான். அவன் சொல்லும்போது, “அவருடைய மகிமையான பிரசன்னத்தை உணர்ந்தேன். மக்கள் என் வாழ்க்கையில் மாற்றத்தைக் கண்டனர். இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான போதைப் பொருள் தொழிலாளி நான்தான்” என்று கூறினான்.
இயேசு அத்துடன் நிறுத்தவில்லை. கிளாட், கொக்கென் என்னும் போதைப் பொருள்கள் நிரம்பிய பையை நிறுத்துப்பார்க்கும்போது, இது முட்டாள்தனம் என்பதையும் தான் மக்களுக்கு விஷத்தைக் கொடுப்பதாகவும் உணர்ந்தான். போதைப் பொருட்கள் விற்பதை நிறுத்திக் கொண்டு, வேறு வேலை தேடிப் பிழைத்துக்கொள்ளத் தீர்மானித்தான். பரிசுத்த ஆவியானவரின் துணையோடு அவனுடைய மொபைல் போனை அணைத்துவிட்டான். திரும்பவும் அந்த தொழிலுக்குப் போகவில்லை.
இந்த வகையான மாற்றத்தையே எபேசு சபைக்கு பவுல் நிருபம் எழுதும்போது குறிப்பிடுகிறார். “மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு…மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” (எபேசியர் 4:22-24) என்று ஆலோசனை கூறுகிறார். இதற்கு பவுல் பயன்படுத்தும் வினைச்சொல்லானது, நாம் புதிய சாயலை அன்றாடம் தரித்துக்கொள்ளவேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கிளாடுடைய வாழக்கையில் பரிசுத்த ஆவியானவர் செய்ததுபோல, நம்முடைய புதிய சாயலைத் தரித்து கிறிஸ்துவைப் போல் மாறுவதற்கு அவர் விரும்புகிறார்.

ஓராண்டில் வேதாகமம்

எப்.பி. மேயெர் (1847-1929) என்னும் ஆங்கில பிரசங்கியார், “வாசம்பண்ணும் கிறிஸ்துவின் ஆழமான தத்துவம்” என்ற அவருடைய போதனைக்கு முட்டையை உதாரணமாய் பயன்படுத்துகிறார். ஒரு முட்டைக்குள் இருக்கிற உயிருள்ள கரு ஒவ்வொரு நாளும் வளர்ச்சியடைந்து ஒரு கோழிக்குஞ்சாய் உருவெடுக்கிறதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதேபோல, பரிசுத்த ஆவியானவர் மூலமாய் இயேசு கிறிஸ்துவும் நமக்குள் வாசம்பண்ணுகிறார். மேயெர், “இதிலிருந்து கிறிஸ்து உங்களுக்குள் வளர்ந்து பெருகி, அனைத்தையும் அவருக்குள் உறிஞ்சி, உன்னில் முழுமையாய் உருவாகப்போகிறார்” என்று சொல்லுகிறார்.
பரிசுத்த ஆவியானவர் மூலமாய் நமக்குள் வாசம்பண்ணும் கிறிஸ்து என்னும் மகிமையான சத்தியத்தை அவர் நேர்த்தியாய் விளக்கவில்லை என்பதை அவர் அறிந்து, இயேசுவை நேர்த்தியற்ற விதத்தில் சித்தரித்ததற்காக மன்னிப்பும் கோரினார். ஆனால் இயேசு “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” (யோவான் 14:20) என்ற தெய்வீக சத்தியத்தை மற்றவர்களோடு பகிரும்படிக்கு விசுவாசிகளை அவர் ஊக்கப்படுத்தினார். இயேசு தன் சீஷர்களோடு கடைசி போஜன பந்தியிருக்கையில் இதைச் சொன்னார். அவருக்கு கீழ்ப்படிகிற யாவருக்குள்ளும் இயேசுவும் பிதாவும் வந்து வாசம்பண்ணுவார்கள் என்ற சத்தியத்தை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார் (வச. 23). யார் அவரை விசுவாசிக்கிறார்களோ அவர்களை உள்ளும் புறம்பும் மறுரூபமாக்குவதற்கு ஆவியானவர் மூலம் அவர்களுக்குள் இயேசு வாசம்பண்ண முடியும்.
நீங்கள் எந்த வழியில் உருவகப்படுத்தினாலும் சரி. கிறிஸ்து நமக்குள் வாசம்பண்ணுகிறவர், வழிநடத்துகிறவர், அவரைப்போல் மாறுவதற்கு உதவிசெய்கிறார்.

பெயரின் வல்லமை

மும்பையின் தெருக்களில் இருந்த சிறு பிள்ளைகளை உற்சாகமூட்ட, அவர்கள் பெயர்களை வைத்தே ஒரு பாடலை ரஞ்சித் இயற்றினான். ஒவ்வொரு பெயருக்கென ஒரு இசையமைத்து, அதின் ராகத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தான். அவர்களுடைய பெயரை அவர்கள் நினைக்கையில், ஒரு உத்வேகம் அவர்களுக்கு உண்டாகுமென்று, இப்படிச் செய்தான். தங்கள் பெயரைச் சரியாகக் கூட உச்சரிக்கத் தெரியாமல் இருந்த அவர்களுக்கு, இது ஒரு கௌரவமாகவே இருந்தது.

வேதத்தில் பெயர்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில், பொதுவாக அவை அவர்களின் பண்புகளையோ அல்லது செய்த செயல்களையோ பிரதிபலிக்கும். உதாரணமாக தமது அன்பின் உடன்படிக்கையை ஆபிராமோடும், சாராயோடும் தேவன் ஏற்படுத்துகையில், அவர்கள் பெயர்கள் மாற்றப்பட்டன. "மேன்மைமிகு தந்தை" என்ற அர்த்தமுடைய ஆபிராம், "அநேகருக்குத் தந்தை" என்ற அர்த்தமுடைய ஆபிரகாமாக மாற்றப்பட்டான். மேலும் "இளவரசி" எனும் பொருள்கொண்ட சாராய், "அநேகருக்கு இளவரசி" எனும் சாராளாக மாற்றப்பட்டாள். (பார்க்கவும்.ஆதியாகமம் 17:5, 15). 

தேவன் அவர்களுக்கு இட்ட புதுப் பெயர்கள், இனி அவர்கள் பிள்ளையில்லாமலிருப்பதில்லை என்றக் கிருபையின் வாக்குத்தத்தத்தோடு இருந்தன. சாராள் பிள்ளை பெற்றபின், அவர்களுடைய மட்டற்ற மகிழ்ச்சியினால் அவனுக்கு "ஈசாக்கு" என்று பெயரிட்டனர். அதின் அர்த்தம், "அவன் நகைக்கிறான்" என்பதாகும். சாராள், "தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள். (ஆதியாகமம் 21:6) என்றாள்.

ஜனங்களை அவர்களுடைய பெயரால் அழைக்கையில், அவர்களுக்கு கனத்தையும் மரியாதையையும் நாம் தருகிறோம். மேலும், தேவன் அவர்களை யாராக இருக்கவேண்டுமென்று படைத்ததையும் உறுதிப்படுத்துகிறோம். அவர்கள் தேவனுடைய சாயலை பிரதிபலிப்பதால், அவர்களுடைய தனித் தன்மையை உணர்த்தும் புனைப் பெயர்களும் உண்டு.

எனக்கேற்ற இடம்

அந்தச் சபையின் ஸ்தோத்திரக் கூடுகையின் முடிவில், விசுவாசிகள் தங்கள் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும்வண்ணமாக சுற்றிநின்று நடனமாடினர். ரவி சற்றுத் தள்ளி நின்று, ஒரு பெரிய புன்னகையுடன் அதை ரசித்தார். இதுபோன்ற தருணங்கள் தனக்கு எவ்வளவாய் பிடிக்கிறது என்று வியந்தவாறே, "இப்போது இது என் குடும்பம், சமுதாயம், நான் நேசிக்கவும், நேசிக்கப்படவும் உரித்தான ஓரிடத்தைக் கண்டுகொண்டேன்" என்றார்.

சிறுவனாக, ரவி மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்தப்பட்டு மகிழ்ச்சியை இழந்திருந்தார். ஆனால், அருகேயிருந்த திருச்சபையினர் அவரை வரவேற்று இயேசுவை அறிமுகப்படுத்தினர். அவர்களுடைய ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இவரைத் தொற்றிக்கொள்ளவே, இயேசுவைப் பின்பற்றத் துவங்கி, நேசிக்கப்படுகிறவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும் உணர்ந்தார்.

சங்கீதம் 133 ல், தாவீது "நன்மையும் இன்பமுமான" தேவபிள்ளைகளின் ஐக்கியத்தை விவரிக்க வல்லமையான உருவகங்களைப் பயன்படுத்துகிறார். “அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்” (வ. 2) எனக் கூறுகிறார். இவ்வகையான அபிஷேக முறை பண்டைக்கால வழக்கமாகும், சிலசமயம் வீட்டிற்கு வரும் விருந்தாளியைக் கூட இப்படியே வரவேற்பர். மேலும் தாவீது, “எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (வ.3) என்று இந்த ஐக்கியமானது ஜீவனையும் ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறதாகக் கூறுகிறார் (வ.3). தைலமானது அறைமுழுதும் வாசனையைப் பரப்பும், பனியானது வறண்ட நிலத்தை ஈரமாக்கும். நாம் கிறிஸ்துவோடு ஐக்கியப்படுகையில், தனிமையானவர்களை ஏற்றுக்கொள்வது போன்ற பல நன்மையும், இன்பமுமான நன்மைகளை தேவன் நம் மூலமாக அளிப்பார்.

சோதனைகளுக்கான கிருபை

ஸ்ரீதேவி சிறுபிராயத்திலிருந்தே பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவளுடைய கழுத்து முதல் கால்வரை செயலிழந்திருந்தது. மற்றப் பிள்ளைகள் வெளியில் மகிழ்ச்சியோடு விளையாடும்போது, இவள் மட்டும் மற்றவர்களை சார்ந்தே, குறிப்பாய் அவளுடைய அப்பாவை சார்ந்தே வாழவேண்டியிருந்தது. அவளுடைய கிராமத்தில் திரையிடப்பட்ட கருணாமூர்த்தி என்னும் கிறிஸ்துவின் வாழ்க்கைக் கதை அவளுடைய வாழ்க்கையைத் தொட்டது. அவள் கிறிஸ்துவுக்கு தன்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தாள். அதன் பின்பு, அவளை சந்திக்கும் யாவருக்கும் அவள் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதியாய் விளங்கினாள்.

அவள் தன்னுடைய அனுபவத்திலிருந்து, உபத்திரவம் என்பது எல்லோருக்கும் பொதுவானது, ஆனால் தேவனால் நேசிக்கப்படுகிறவர்களை அவர் கைவிடுவதில்லை என்பதைக் கற்றுக்கொண்டாள். சோர்ந்து போய் அவளிடம் வருபவர்களிடமெல்லாம் தேவ அன்பை பகிர்ந்து கொள்வாள். அவளுடைய வாழ்க்கையின் இறுதியில், 180 பேர் அவள் மூலமாய் இயேசுவை அறிந்துகொண்டார்கள். அதில் பெரும்பாலானவர்கள் மிஷனரிகளாகவும் ஊழியர்களாகவும் மாறியிருக்கின்றனர்.

மோசே உபத்திரவத்தையும் போராட்டங்களையும் சந்தித்தார். ஆனால் தேவப் பிரசன்னம் அவரோடிருப்பதை அவர் உணர்ந்தார். இஸ்ரவேலர்கள் மீதான தன்னுடைய தலைமைத்துவத்தை யோசுவாவிடம் ஒப்படைத்தபோது, “உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்” (உபா. 31:6) என்று ஆலோசனை கூறினார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது, வல்லமை மிக்க எதிரிகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதை அறிந்த மோசே, யோசுவாவிடம், “நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்” (வச. 8) என்று அறிவுறுத்தினார்.

இந்தப் பாவ உலகத்தில், கிறிஸ்துவின் சீஷர்கள் பாடுகளையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் நம்மை பெலப்படுத்தும் ஆவியானவர் நம்மோடே இருக்கிறார். அவர் நம்மை விட்டு விலகுவதில்லை.